135 குழந்தைகளுக்கு ராமர் சீதை பெயர்கள்

புதுடெல்லி: ஜனவரி. 24 – அயோத்தியில் ராமர் கோயிலின் தாக்கம் பல பகுதிகளில் ஏற்பட்டு உள்ளது. இது, டெல்லிக்கு மிக அருகில் அமைந்துள்ள உ.பி.யின் முக்கிய நகரமாக அலிகரில் வித்தியாசமானதாக உள்ளது.
இங்கு ராமர் கோயில் திறக்கப்பட்ட நாளான ஜனவரி 22-ல் இந்து குடும்பங்களில் மட்டும் 135 குழந்தைகள் பிறந்தன. இக்குழந்தைகளில் ஆண்களுக்கு ராம், ராம்குமார், ராமேஷ்வர், ரகுராம், ரகுநந்தன் என ராமர் பெயரை அடிப்படையாக வைத்து பெயர்கள் வைக்கப்பட்டன.
அதேபோல், பெண் குழந்தைகளுக்கு ராமரின் மனைவியான சீதா பெயரின் அடிப்படையில், சீதாமா, சீதா தேவி என்ற வகையில் பெயரிட்டு அந்த குழந்தையின் பெற்றோர் மகிழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் குழந்தையின் பெற்றோர்களில் ஒருவரான குல்தீப்சிங் கூறும்போது, ‘‘குழந்தைகளின் பெற்றோர்களில் பெரும்பாலானவர்கள் ராமபக்தர்கள். இதன் காரணமாக அவர்களது குடும்பங்களில் மகிழ்ச்சி பெருகி உள்ளது. இதில் அறுவை சிகிச்சையால் பிறந்த குழந்தைகளின் பெற்றோர்களில் பலரும் ஜனவரி 22-ல் பெற்றெடுக்க வேண்டி மருத்துவமனைகளில் முன்கூட்டியே நேரம் கேட்டிருந்தவர்கள் எனக் கேள்விப்பட்டோம்’’ என்றார்.இதுபோல், அயோத்தியில் ராமர் சிலையின் பிராண பிரதிஷ்டை நேரமான நண்பகல் 12.30 மணிக்கு மேல் அறுவை சிகிச்சைகள் துவங்கின. அலிகரின் அருகிலுள்ள நகரமான பெரோஸாபாத்தில் 56 குழந்தைகள் ஜனவரி 22-ல் பிறந்தன. முஸ்லிம்களுக்கும் எதிர்பார்ப்புகள் இன்றி இதே நாளில் குழந்தைகள் பிறந்தன. இவர்களில் பெரோஸாபாத்தை சேர்ந்த முஸ்லிம் பெண்ணான பர்ஸானா தனது குழந்தைக்கு ராம் ரஹீம் எனப் பெயரிட்டுள்ளார். ஆக்ரா மற்றும் சில முக்கிய நகரங்களிலும் இதே நிலை காணப்பட்டது.