14 ஆயிரம் பள்ளிகளை தரம் உயர்த்த ரூ.27 ஆயிரம் கோடி திட்டம்

புதுடெல்லி, செப்.8
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அனுராக் தாக்குர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயாக்கள், நவோதயா வித்யாலயாக்கள் உள்பட 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட பள்ளிகள், ‘பிரதமர்-ஸ்ரீ’ பள்ளிகளாக (பிரதமர்-எழுச்சி இந்தியாவுக்கான பள்ளிகள்) உருவெடுக்க தரம் உயர்த்தப்படும். அதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நிர்வகிக்கும் பள்ளிகள் இதில் சேர்க்கப்படும். இதற்கான மொத்த செலவு 5 ஆண்டுகளுக்கு ரூ.27 ஆயிரத்து 360 கோடி ஆகும். இதில் மத்திய அரசின் பங்கு ரூ.18 ஆயிரத்து 128 கோடி. இத்திட்டத்தால் 1 கோடியே 87 லட்சம் மாணவர்கள் பலன் அடைவார்கள். ரெயில்வே நிலத்தை ‘பிரதமரின் கதிசக்தி’ திட்டத்துக்காக நீண்டகால குத்தகைக்கு விடும் கொள்கைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. தற்போதைய 5 ஆண்டுகளுக்கு பதிலாக 35 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படும். அந்த நிலங்களில் 300 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும். இதன்மூலம் 1 லட்சத்து 25 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும். கேரள மாநிலம் கொச்சியில் 2-ம்கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. 11 கி.மீ. தூரத்துக்கு ரூ.1,957 கோடி செலவில் இத்திட்டம் மேற்கொள்ளப்படும். இந்த வழித்தடத்தில் 11 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.