15 சிலைகள் பறிமுதல்

சென்னை: நவம்பர். 21 – சென்னை திருவான்மியூர் அருகே பழங்கால சிலைகளை விற்க முயன்ற சுரேந்திரா என்ற தரகர் கைது செய்யப்பட்டார். 15 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து திருடப்பட்ட பழங்கால பொருட்கள் மற்றும் சிலைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தற்போது மீட்கப்பட்டு வருகிறது. மேலும் பழங்கால சிலைகளை விற்க முயன்றவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை திருவான்மியூர் அருகே பழங்கால சிலைகளை விற்க முயன்றரை போலீசார் கைது செய்தனர்.
நடராஜர், அம்மன், புத்தர், விநாயகர் உள்ளிட்ட 15 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் பறிமுதல் செய்தது. பழங்கால சிலைகளை தரகர் சுரேந்திரா விற்கவுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சுரேந்திராவிடம் பேரம் பேசுவது போல் நடித்து போலீசார் அவரை சென்னைக்கு வரவழைத்துள்ளனர். ஈரோட்டில் இருந்து சென்னைக்கு வந்த சுரேந்திராவிடம் சிலை வாங்குவது போல் நடித்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். டி.எஸ்.பி. முத்துராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் திருவான்மியூரில் சுரேந்திராவை கைது செய்தனர்.