1,500 ஆசிரியர்கள் நேரடி நியமனம்

சென்னை: ஜன.5- தமிழக தொடக்க கல்வி துறையின்கீழ் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 1,500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நியமனம் செய்ய அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக தொடக்க கல்வி துறையின்கீழ் 31,214 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 35 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே, கரோனா பரவலுக்கு பிறகு, அரசுப் பள்ளிகளில் சுமார் 5 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். அதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மட்டும் 2.8 லட்சம் பேர் கூடுதலாக சேர்க்கை பெற்றனர்.
ஆனால், 2013-14-ம் கல்வி ஆண்டுக்கு பிறகு, தமிழக அரசால் இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், தற்போது தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மட்டும் 8,643 இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளன.இவற்றை சமாளிக்க தொகுப்பு ஊதியத்தில் பட்டதாரிகள் நியமனம் செய்யப்பட்டு, மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுதவிர பெரும்பாலான பள்ளிகளில் ஒரு ஆசிரியர், இரு ஆசிரியர்களை கொண்டு இயங்கும் நிலை உள்ளதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், வரும் ஆண்டுகளில் ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதால் காலி பணியிடங்களை துரிதமாக நிரப்ப வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.