16 அகதிகள் உயிரிழப்பு

மெக்சிகோ சிட்டி, ஆக.24-
மத்திய மெக்சிகோ மாகாணமான பியூப்லாவில் இருந்து அகதிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று அமெரிக்கா நோக்கி சென்று கொண்டிருந்தது. குவாக்னோபாலன்-ஓக்சாகா நெடுஞ்சாலையில் அந்த பஸ் சென்றது. அதே சாலையில் கனரக லாரி ஒன்று பஸ்சை பின்தொடர்ந்து வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை லாரி திடீரென இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறி முன்னே சென்று கொண்டிருந்த பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அகதிகளை ஏற்றிச் சென்ற பஸ் அப்பளம்போல் நொறுங்கியது. விபத்தில் 15 மெக்சிகோ பயணிகள் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 36 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக அந்தப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது.