16 இடங்களில் சோதனை: தங்கம், வைரம் மற்றும் பணம் பறிமுதல்

பெங்களூரு, ஏப். 24:
லோக்சபா தேர்தலையொட்டி, பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதியில் கடந்த 2 நாட்களாக வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் 16 இடங்களில் சோதனை நடத்தி கிலோ கணக்கில் தங்கம், வைரம், ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சங்கரபுராவில் ரூ. 3 கோடிக்கு மேல் மதிப்புள்ள 4 கிலோ 400 கிராம் தங்க நகைகள் சிக்கியது. சாராதேவி சாலையில் ரூ.3 கோடியே 39 லட்சம் மதிப்பில் 4 கிலோ 800 கிராம், மெர்கன்டல் வங்கி அருகே ரூ.2 கோடியே 13 லட்சம் மதிப்பில் 3 கிலோ 400 கிராம், ஜெயநகர் 3வது பிளாக்கில் ரூ.5 கோடியே 33 லட்சம் மதிப்பில் 7 கிலோ 598 கிராம், ரூ.84 மதிப்பிலான 1 கிலோ 200 கிராம், சாமராஜ்பேட்டையில் சரஸ்வத் வங்கியில் தங்கக்கட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
பசவனகுடி தபால் நிலையம் அருகே ரூ.3 லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள 6.38 காரட் வைரமும், மாதா சாரதா தேவி சாலையில் ரூ.3 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான 5.99 காரட் வைரமும், ஜெயநகரில் ரூ.6 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள 202.83 காரட் வைரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மொத்தம் ரூ.16.10 கோடி மதிப்புள்ள 22 கிலோ 923 கிராம் தங்கம், ரூ.6 கோடியே 45 லட்சம் மதிப்புள்ள வைரங்கள் 1.33 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பெல்லாரியில் 23 லட்சம் பறிமுதல்:
பெல்லாரி புரூஸ் டவுன் போலீசார், எப்.எஸ்.டி., வி.வி.எஸ்.டி., குழுவினரின் கூட்டு நடவடிக்கையில், ஆவணங்கள் இன்றி சேகரிக்கப்பட்ட, ரூ.23 லட்சம் பணம், 450 கிராம் தங்கம், 13 கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
கம்பளி பஜாரில் உள்ள சுன்னிலால் ராகேஷ் குமார் ஷா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் கமலேஷ் ஜெயின் என்பவரது வீட்டில் இந்த அளவு பணம், தங்கம் மற்றும் வெள்ளி சிக்கியது. கைப்பற்றப்பட்ட பணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை வணிக வரி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஞ்சித் குமார் பண்டாரு தெரிவித்தார்.