
புதுடெல்லி: ஜனவரி. 21 – மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பாக பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மத்திய அரசுத் துறைகளின் மனித வளங்கள் குறித்து பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதனடிப்படையில், அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் சிறப்பு பணி நியமனங்கள் மூலம் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 10 லட்சம் இடங்களை நிரப்பிட பிரதமர் மோடி அப்போது அறிவுறுத்தினார். நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் ரோஜ்கார் மேளா என்ற திட்டத்தை பிரதமர் மோடி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிவைத்தார்.
இதற்கிடையே, அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 71,000 பேருக்கு காணொலி காட்சி வாயிலாக பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று வழங்கினார். இந்நிலையில், பிரதமர் மோடி வழங்கிய 71,000 பணிநியமன ஆணைகள் மிகவும் குறைவு. அரசுத் துறைகளில் 30 லட்சம் பணியிடங்கள் இன்னும் காலியாகவே உள்ளன என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். இதுதொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நரேந்திர மோடி ஜி, அரசுத் துறைகளில் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இன்று நீங்கள் வழங்கும் 71,000 பணிநியமன ஆணைகள் மிகக் குறைவு. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான செயல்முறை நடந்து வருகிறது. ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் தருவதாக வாக்குறுதி அளித்தீர்கள். கடந்த எட்டு ஆண்டுகளில் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 16 கோடி வேலை வாய்ப்புகள் எங்கே என்று இளைஞர்களுக்குச் சொல்லுங்கள் என இந்தியில் பதிவிட்டுள்ளார்.