18 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்தனர்

ஹைதராபாத்:பிப்.22-
துபாயில் கொலை வழக்கு ஒன்றில் 18 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்த தெலங்கானாவை சேர்ந்த 5 பேர் விடுதலையாகி, நேற்று ஹைதராபாத் திரும்பினர்.
தெலங்கானா மாநிலம் சிரிசில்லா, ருத்ராங்கி, கொனராவ் பேட்டா ஆகிய ஊர்களை சேர்ந்த 5 பேர் பிழைப்புக்காக 18 ஆண்டுகளுக்கு முன் துபாய் சென்றனர். அங்கு, நேபாளத்தை சேர்ந்த காவலாளி பகதூர் சிங் கொலை வழக்கில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு துபாய் நீதிமன்றம் முதலில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. பிறகு மேல்முறையீட்டில் தண்டனை 25 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் தனி தெலங்கானா மாநிலம் உருவான பிறகு இந்த 5 பேரின் குடும்பத்தினர் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகனும் அப்போதைய அமைச்சருமான கே.டி.ராமாராவை சந்தித்தனர். எப்படியாவது 5 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்றாடினர்.
இதையடுத்து கே.டி. ராமாராவ் இவர்களுக்காக நேபாளம் சென்று, துபாயில் கொல்லப்பட்ட பகதூர் சிங்கின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். அவர்களிடம் இழப்பீடாக தனது சொந்தப் பணம் ரூ.15 லட்சத்தை வழங்கினார். அவர்களிடம் மன்னிப்பு பத்திரம் எழுதி வாங்கி அதனை துபாய்க்கு அனுப்பி வைத்தார்.இதன் அடிப்படையில் 5 பேரையும் மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என கோரப்பட்டது. எனினும் துபாய் நீதிமன்றம் இதனை நிரா கரித்தது. இந்நிலையில் 5 பேரும் தங்களின் உடல்நலம் நாளுக்கு நாள் குன்றி வருவதால் தங்களை விடுதலை செய்ய வேண்டும் துபாய் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தனர்.