18 வயது தலைவன் கைது: பாலிவுட் படத்தால் உந்தப்பட்டு ஆயுதம் எடுத்ததாக பதிவு

புதுடெல்லி, செப். 1- டெல்லியில் அமேசான் மேலாளர் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான மாயா கும்பலின் 18 வயது தலைவன் நேற்று கைதானார். இவர் பாலிவுட்டின் ‘ஷுட் அவுட் லோக்கன்ட்வாலா’ படநாயகன் விவேக் ஓபராய் பாத்திரத்தால் கவரப்பட்டு ஆயுதம் எடுத்ததாக, தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவு செய்துள்ளார். டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் பஜன்புறாவில் வசித்தவர்ஹர்பிரீத் கில் (36). இவர் கடந்த செவ்வாய்கிழமை இரவு தனது நண்பரான கோவிந்த் சிங் (32) உடன் விருந்து உண்ண கிளம்பினார். இரு சக்கர வாகனத்தில் இரவு 11.30 மணிக்கு சென்றவர்கள் மீது மற்றொரு பைக் மோதியது. இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சமீர் என்பவர் துப்பாக்கியை எடுத்து ஹர்பித், கோவிந்த் ஆகியோரை நோக்கி சுட்டதில் ஹர்பிரீத் அதே இடத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த கோவிந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 6 தனிப்படை: டெல்லியை அதிரவைத்தை இந்த சம்பவத்தில் பஜன்புறா காவல் நிலையம் ஆறு தனிப்படைஅமைத்து தீவிரத் தேடலில் இறங்கியது. இதில், முக்கியக் கொலையாளியான மாயா என்கிற முகம்மது சமீர்(18) நேற்று கைதாகி உள்ளார். இவரது கும்பலை சேர்ந்த மற்றொருவரான பிலால் கனி(18) என்பவரும் கைதாகி இருப்பதாகத் தெரிகிறது. இவர்களை சிசிடிவி உதவியால் டெல்லி போலீஸார் தேடி வந்தனர். இதில் சந்தேகத்திற்கிடமாக மாயா எனும் பெயருடைய கும்பலின் ஐந்து பேருக்கு வலை வீசப்பட்டிருந்தது. இவர்களில் தலைவன் சமீர் மற்றும் பிலால் கனி நேற்று சிக்கி உள்ளனர். எந்த படம்?: 18 வயதான சமீர், இந்தியில் 2007 ஆம் வருடம் வெளியான ‘ஷுட் அவுட் அட் லோக்கன்ட்வாலா’ படத்தை பார்த்து ஆயுதம் எடுத்துள்ளார். இதன் நாயகனான விவேக் ஓபராய் திரையில் வைத்த மாயா எனும் பெயரில் தன்னை அழைத்துக் கொண்டார். இதனால், மாயா கும்பல் எனும் பெயரில் இன்ஸ்டாகிராம் மற்றும் யுடியூப்பிலும் தனது படங்களை பதிவேற்றம் செய்திருந்தான். அதில் சமீர் கைகளில் பல்வேறு விதமான துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் அவர் வைத்திருந்தார். ‘மாயா பாய் கேங்’ எனும் பெயரிலான முகநூலில், விவேக் ராயின் திரைப்படப் பதிவுகள் இடம் பெற்றுள்ளன.