19 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நக்சல் தாக்குதல் தொடர்பாக‌ 5 பேர் கைது

பாவகடா, ஜன. 8: 19 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நக்சல் தாக்குதலில் போலீசார் படுகொலை செய்தது தொடர்பாக பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு, பாவகடா, நாகலமடிக்கே ஒன்றியம் வெங்கடம்மனஹள்ளியில் நக்சல்களால் போலீஸார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரு பெண் உட்பட 5 பேரை போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.ஆந்திர மாநிலம் கந்திமேரியைச் சேர்ந்த நாகராஜு (40), தர்மாவரம் பகுதியைச் சேர்ந்த பத்மா (35), ராமகிரி தளிமடுகு பகுதியைச் சேர்ந்த போய ஓபலேஷ் (40), ராம்மோகன் (42), ஆஞ்சநேயுலு (44) ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு ஆந்திர மாநிலத்துக்கு கொண்டுவர‌ப்பட்டுள்ளனர்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கைது செய்யப்பட்டவர்கள் பாவகடா காவல் நிலையத்திற்கு வரவழைத்து இரவு வரை போலீசார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து காவல் நிலையத்தின் பிரதான வாயில் பூட்டப்பட்டு, பொதுமக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.
போலீசார் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக பாவகடா மற்றும் மதுகிரி நீதிமன்றங்களில் இன்னும் வழக்குகள் நிலுவையில் உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்களை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் தலைமறைவாக இருந்துள்ளனர். அவர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வருகின்றனர்.
ஆந்திரா – கர்நாடக எல்லையில் அதிகரித்துள்ள நக்சல் அச்சுறுத்தலை தடுக்க, வெங்கடம்மனஹள்ளியில் நக்சல் எதிர்ப்புப் படை முகாமிட்டிருந்தது. 2005ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி இரவு, வெங்கடம்மனஹள்ளி பள்ளி வளாகத்தில் உள்ள போலீஸ் முகாம் மீது லாரியில் வந்த நக்சலைட்டுகள் கும்பல் திடீரென தாக்குதல் நடத்தியது.
முகாமுக்குள் புகுந்த நக்சலைட்டுகள், அதிநவீன ஆயுதங்களை கொள்ளையடித்து போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 7 போலீசார் மற்றும் அங்கிருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.நீதிமன்றத்தில் போலீசார் சமர்ப்பித்த புதிய குற்றப்பத்திரிகையில் 42 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முதலாவது குற்றவாளியான புரட்சிப் பாடகர் கதர் நவம்பர் 2019 இல் பாவகடா நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் அண்மையில் இறந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான வரவராவ் மகாராஷ்டிரா சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.