19 மாவட்டங்களில் கனமழை

சென்னை: நவ. 4: தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் 6-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும், வரும் 7, 8-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 9-ம் தேதி சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். சில நேரங்களில் கனமழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.
நவ. 3-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, தென் மாவட்டங்களில் பரவலாகவும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 8 செ.மீ. திருநெல்வேலி மாஞ்சோலை, ராதாபுரம், காக்காச்சியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
வலுவான காற்றழுத்தம் இல்லாததால், பரவலாக தொடர் மழை பெய்யவில்லை. தற்போது கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையிலிருந்து ஈரப்பதம் மிகுந்த காற்று வீசி வருகிறது. எனவே, கடலோர மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது