1999-ல் இந்தியா உடனான அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது” – நவாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத், மே 29:
கடந்த 1999-ல் இந்திய தேசத்துடனான அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பிஎம்எல் (நவாஸ்) கட்சியின் பொது கவுன்சிலில் அவர் இதனை தெரிவித்தார்.
“கடந்த 1998-ம் ஆண்டில் அணு ஆயுத சோதனையை பாகிஸ்தான் மேற்கொண்டது. அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தானுக்கு வந்து ஒப்பந்தம் மேற்கொண்டார். ஆனால், அதனை பாகிஸ்தான் மீறி இருந்தது.
அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், அணு ஆயுத சோதனையை நிறுத்த சொல்லி இருந்தார். அதற்காக 5 பில்லியன் டாலர்களை தருவதாகவும் தெரிவித்தார். ஆனால், நான் அதை ஏற்க மறுத்தேன். அப்போது எனது இடத்தில் இம்ரான் கான் இருந்திருந்தால் அதை ஏற்றுக் கொண்டு இருப்பார்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையில் அமைதியை நிலைநாட்டும் வகையில் ‘லாகூர் பிரகடனம்’ ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன் பிறகே பாகிஸ்தான் படைகள் ஜம்மு காஷ்மீரின் கார்கில் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தன. அது கார்கில் போர் ஏற்பட காரணமாக அமைந்தது.