“2ஜி, 3ஜி, 4ஜி-கள் நிறைந்தது இண்டி கூட்டணி” – அமித் ஷா விமர்சனம்

புதுடெல்லி, பிப். 19- பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: மகாபாரதத்தில் கவுரவர்கள் பாண்டவர்கள் என 2 பிரிவினர் இடையே போர் நடந்தது. இதுபோல இப்போது வரும் மக்களவைத் தேர்தலில் 2 பிரிவுகள் உள்ளன. இதில் ஒன்று பாஜக தலைமையிலான தே.ஜ.கூ, மற்றொன்று காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி.
இதில் இண்டி கூட்டணி என்பது வாரிசு கட்சிகளின் கூட்டணியாக உள்ளது. இந்தக் கட்சிகள் நாட்டில் வாரிசு அரசியல், ஊழல், திருப்திபடுத்தும் அரசியலை வளர்த்தன. அதேநேரம், நாட்டின் கொள்கைகளை பின்பற்றும் கட்சிகள் அடங்கிய கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது. பாஜக கூட்டணியை வழிநடத்தும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறார்.
ஆனால், காங்கிரஸ் தலைமை
யிலான இண்டி கூட்டணி கட்சிகள் தங்கள் குடும்ப வளர்ச்சிக்காக பாடுபடுகின்றன. இக்கூட்டணி 2ஜி, 3ஜி, 4ஜி-கள் நிறைந்தவையாக உள்ளது (ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 2, 3, 4 தலைமுறைகளாக கட்சியை வழிநடத்துவதை குறிப்பிட்டார்). பிரதமர் மோடி ஏழைகள் மற்றும் நாட்டின் முன்னேற்றம் குறித்து சிந்திக்கிறார். ஆனால் இண்டி கூட்டணி தலைவர்கள் தங்கள் பிள்ளைகளை பிரதமராக மாநில முதல்வராக ஆக்க வேண்டும் என சிந்திக்கின்றனர்.பாஜகவில் வாரிசு அரசியல் இருந்திருந்தால். டீ விற்பனை செய்தவரின் மகன் (நரேந்திர மோடி) நாட்டின் பிரதமராகி இருக்க முடியாது. எனவே, எந்த கூட்டணி வேண்டும் என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.