2வது நாளாக பஸ் சேவை முடக்கம்


பெங்களூரு, ஏப். 8- ஆறாவது ஊதிய ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வற்புறுத்தி போக்குவரத்துக்கு ஊழியர்கள் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நடந்து வருவதால் இன்றும் கூட எவ்வித பஸ் போக்குவரத்தும் தென்படவில்லை. இதனால் பயணிகள் பஸ்கள் இல்லாமல் பெரும் அவஸ்தைக்குள்ளாயினர். இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக்கு ஊழியர்களுக்கு பாடம் கற்பிக்க மாநில அரசு பயிற்சி பெற்ற ஓட்டுனர்களை கொண்டு பஸ்களை ஓட்ட முன்வந்துள்ளது. கோரிக்கைகளை வற்புறுத்தி போக்குவரத்துக்கு ஊழியர்கள் அடம் பிடிப்பதால் இன்று முதல் பஸ்களை வீதிக்கு இறக்க பயிற்சி பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கு வருமாறு ஆலோசனை வழங்கியுள்ளது. பயிற்சி பெற்ற ஓட்டுனர்கள், கண்டெக்டர்கள் மற்றும் மெக்கானிக்குகள் இன்று கட்டாயமாக பணிக்கு ஆஜராகும்படி பிஎம்டிசி அறிவித்திருப்பதுடன் அப்படி வராதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இன்னும் மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் கூட பஸ்களின் போக்குவரத்துக்கு நின்றுவிட்ட நிலையில் பஸ்கள் இல்லாமல் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாநிலத்தின் பல நகரங்களில் தனியார் வாகன வசதி ஏற்பதியிருப்பதுடன் மூட்டை முடிச்சுகள் மற்றும் குழந்தைகளுடன் மக்கள் பஸ்சுக்காக காத்திருந்தனர். கேஎஸ்ஆர்டிசி மற்றும் பிஎம்டிசி உட்பட மாநில அரசுக்கு சொந்தமான நான்கு போக்குவரத்துக்கு கழகங்களின் ஊழியர்களும் இன்று பணிக்குவரவில்லையென்பதால் மாநிலத்தின் பல மாவட்டங்களில் பஸ்களின் எந்த ஓட்டமும் இருக்கவில்லை. போக்குவரத்து ஊழியரின் இந்த போராட்டத்தின் விளைவாக நகரில் இன்றும் பிஎம்டிசி பஸ்கள் சாலையில் இறங்காததால் தினமும் வேலை மற்றும் வேறு பணிகளுக்கு பஸ்களை மட்டுமே நம்பியிருந்த மக்கள் வேறு உபாயங்களை தேடி அலைந்துகொண்டிருந்தனர். பஸ் நிறுத்தத்தால் நகரின் மெஜஸ்டிக் , சாட்டிலைட் டவுன் , சாந்திநகர் எசவந்தபுரம் உட்பட முக்கிய பஸ் நிலையங்கள் வெறிச்சோடி இருந்தன. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பல தனியார் பஸ்கள் களத்தில் இறங்கியுள்ளன. பஸ் நிறுத்தம் பற்றி தெரிந்திருந்த பொது மக்கள் பலரும் பஸ் நிலையத்திற்குள் வருவதையே தவிர்த்துள்ளனர். மெஜஸ்டிக் பஸ் நிலையம் வெறிச்சோடியதில் தனியார் பஸ் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் வந்திருந்தோரும் ஏமாற்றம் அடைந்தனர். தனியார் பஸ்களுக்கு அரசு பஸ் நிலையங்களுக்குள் வந்து பயணியரை ஏற்றி க்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்திற்கு அஞ்சாமல் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு அனைத்து வித பாதுகாப்பு அளிக்கப்படும் என கே எஸ் ஆர் டி சி நிர்வாக இயக்குனர் ஷிவயோகி அறிவித்திருந்தார். இது தவிர கூடுதலாக மாநிலம் முழுக்க ரயில் மற்றும் பெங்களூரு நகரில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை அதிகரிக்கவும் அரசு தற்போது நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஹூப்ளி பஸ் நிலையத்திலிருந்து பாதுகாப்புடன் தனியார் பஸ் போக்குவரத்து துவங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியினர் போலீஸ் மற்றும் போக்குவரத்துக்கு நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் பெலகாவி , விஜயபுர கதக் , மற்றும் மாநிலத்தின் வேறு சில பகுதிகளுக்கு தனியார் பஸ்கள் ஏற்பாடு செய்துள்ளனர். தவிர ஹூப்ளி- தார்வாட்டுக்கு இடையேயும் தனியார் பஸ்கள் விடப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஸ்களில் போலீஸ் பாதுகாப்பும் போட பட்டுள்ளது. பெலகாவியிலும் இதே போல் தனியார் பஸ்கள் கேப் மற்றும் இதர வாகனங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றின் ஓட்டத்திற்கு எவ்வித இடைஞ்சல்களும் ஏற்படவில்லை. குலபுரகியிலும் குறிப்பிட்ட மார்க்கங்களில் தனியார் பஸ்சுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சில தனியார் பஸ்கள் ஹுமணாபாத், பீதர், பெல்லாரி மார்க்கத்திலும் விடபட்டுள்ளன.