2 ஆயிரம் ரூபாய் நோட்டு ரத்து:செப்.30 வரை பரிவர்த்தனைக்கு அனுமதி

மும்பை, மே 19-இந்திய ரிசர்வ் வங்கி உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நாட்டில் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்றது.இனிமேல் எந்த வங்கிகளும் ரூ.2000 நோட்டுகளை வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
2,000 ரூபாய் நோட்டு புழக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அவற்றின் சட்டப்படி செல்லுபடியாகும் தன்மை தொடரும் என்றும், வரும் 23ம் தேதி முதல் வங்கிகளுக்குச் சென்று தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.பணம் மாற்றும் நேரத்தில், ஒரே நேரத்தில் 20 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் பணத்தை மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வங்கிகளிலும் செப்டம்பர் 30-ம் தேதி வரை ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் செய்யவோ அல்லது மாற்றாக பணம் கொடுக்கவோ அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நவம்பர் 2016 இல், நாட்டில் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஏற்கனவே இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிய 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.