2 கோடி உறுப்பினர் சேர்க்க இலக்கு

சென்னை: பிப். 20:
தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை செய்துவந்த நடிகர் விஜய், கடந்த 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தலைமை நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இதில், கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டும். நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்பு செயலி மூலமாக, உறுப்பினர் சேர்க்கை முகாம்களை ஒருங்கிணைக்க வேண்டும். கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தினார்.
மேலும், தொகுதிப் பொறுப்பாளர்கள் தங்களது பகுதிகளில் உள்ள வாக்காளர் விவரங்களை தெரிந்து வைத்திருக்கவேண்டும். கட்சி சார்புள்ளவர்கள், சாராதவர்கள் போன்ற விவரங்களையும் சேகரிக்க வேண்டும். கட்சித் தலைவர் விஜய் உத்தரவின்பேரில் தொகுதி பொறுப்பாளர்களுக்கு விதிக்கப்படும்
நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை ஏற்று செயல்பட வேண்டும். கட்சியின் பெயரில் போஸ்டர்கள், பேனர்கள் தயாரிக்கும்போது, கட்சித் தலைமை வழங்கும் நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.கட்சியின் அதிகாரப்பூர்வ தகவல்கள், கட்சியின் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும். இதை நிர்வாகிகள் பின்பற்றி, 2 கோடி உறுப்பினர் சேர்க்கையை உறுதி செய்யவேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தினார்.