2 நாட்கள் கனமழை

சென்னை: டிசம்பர் 20- தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய வளிமண்டல சுழற்சி லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்றும் நிலவியது. இந்நிலையில், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் (டிச.20), நாளையும் (டிச.21) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் டிச.22 முதல் 25-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.