2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை பாதுகாப்புப்படையினர் அதிரடி

ஸ்ரீநகர், செப்டம்பர் : 16 –
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி அருகே பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்புப்படையினர் இன்று சோதனை நடத்தினர். பாரமுல்லாவின் உரி செக்டாரில் உள்ள ஹத்லங்கா பகுதியில் பாதுகாப்புப்படையினர் சோதனை செய்தபோது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதையடுத்து, பாதுகாப்புப்படையினரும் பதிலடி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்ற நிலையில் பாதுகாப்புப்படையினரின் அதிரடி தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். முன்னதாக, காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் கொகர்நக் கிராமத்தின் ஹடுல் வனப்பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் புதன்கிழமை அதிகாலை வனப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாதுகாப்புப்படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே 3வது நாளாக இன்றும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. இந்த மோதலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ அதிகாரிகள் வீர மரணமடைந்தனர். அடர்ந்த வனப்பகுதி மற்றும் மலைப்பகுதி என்பதாலும், பயங்கரவாதிகள் மலை உச்சியில் பதுங்கி இருப்பதாலும் அனந்த்நாக் துப்பாக்கிச்சண்டை இன்றும் நீடித்து வருகிறது.