2 பேரை சுட்டுக் கொன்று போலீஸ்காரர் தற்கொலை

கொல்கத்தா, ஜூன்.10- மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவின் பார்க் சர்க்கஸ் பகுதியில் வங்காளதேச தூதரக அலுவலகம் அமைந்துள்ளது. நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜ.க. பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ்லிம்கள் இன்று அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த தூதரகத்திற்கு வெளியே பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் திடீரென சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள், வாகன ஓட்டிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த பெண் ஒருவர் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துப்பாக்கி குண்டு பாய்ந்து மேலும் ஒருவர் பலியானார்.துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த போலீஸ்காரர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த 2 பேர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடத்தியது சோதுப் லெப்சா என்ற போலீஸ்காரர் எனவும், மன அழுத்தம் காரணமாக கடந்த சில நாட்களாக விடுமுறையில் இருந்த லெப்சா இன்று பணியில் சேர்ந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்