2 மாத குழந்தைக்கு கொரோனா: மற்றொரு 14 மாத குழந்தைக்கும் வைரஸ்

ஹைதராபாத், டிச.23- தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பிறந்து இரண்டு மாதமே ஆன குழந்தை, 14 மாத குழந்தை என இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த பல மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், சில நாட்களாக திடீரென அந்த வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக நமது அண்டை மாநிலமான கேரளாவில் தான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரளாவில் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால் தென்மாநிலங்கள் அனைத்தும் அலர்ட் நிலையில் இருக்கிறது. தென்மாநிலங்கள் கொரோனா டெஸ்டிங்கை அதிகப்படுத்தியுள்ள நிலையில், கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனையில் இறங்கியுள்ளது. இதற்கிடையே நமது அண்டை மாநிலமான தெலுங்கானாவில் அப்படியொரு ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கே தெலுங்கானா அரசால் நடத்தப்படும் நிலூஃபர் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை இரண்டு கைக்குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதன்படி அங்கே 2 மாத பெண் குழந்தை மற்றும் 14 மாத ஆண் குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 14 மாத ஆண் குழந்தைக்கு இப்போது உடல்நிலை சீராக இருக்கிறது. இருந்த போதிலும் மருத்துவர்கள் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதேநேரம் இரண்டு மாத பெண் குழந்தைக்கு ஹை-ஃப்ளோ நாசல் கேனுலா என்ற சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். அந்த 14 மாத ஆண் குழந்தை கடந்த டிச.18ஆம் தேதி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். அதேநேரம் அந்த சிறுமி இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அவர்களுக்கு இருமல், சளி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட நிமோனியா அறிகுறிகள் இருந்துள்ளது. இது கொரோனாவாக இருக்கலாம் என்று சந்தேகித்த மருத்துவர்கள் அவர்களிடம் கொரோனா பரிசோதனை நடத்தினர். அதன்படி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், அதில் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது.