நெல்லை: செப்டம்பர் . 4 அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்கான பணிகளை பா.ஜனதா மூத்த தலைவர்கள் மேற்பார்வையில் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன்படி மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் செய்துள்ள சாதனைகள், அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் விதமாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.மொத்தம் 3 கட்டங்களாக 6 மாதத்திற்கு அவர் நடைபயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி அண்ணாமலை தனது பாதயாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு நடந்த பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்று பேசினார். தொடர்ந்து அண்ணாமலை ராமநாதபுரம், சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், திருமயம் வழியாக கடந்த ஆகஸ்ட் 3-ந்தேதி காரைக்குடி சென்றார். பின்னர் மதுரை மாவட்டத்தில் கடந்த மாதம் 4, 5-ந்தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அண்ணாமலை விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் 13-ந்தேதி வரை நடைபயணம் மேற்கொண்டார்.இவ்வாறாக மொத்தம் 22 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை 41 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்தார்.