2 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் கொலை

ஸ்ரீநகர்: அக். 10:
ஜம்மு காஷ்மீரின் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் உடனான சண்டையில் 2 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் பாதுகாப்பு படையினர் பயங்கரவாத தடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சோபியான் பகுதியை அடுத்து உள்ள அல்ஷிபோரா என்ற பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவர்கள் அப்பகுதிக்கு படையினரும் விரைந்தனர். அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் கொல்லப்பட்டவர்கள் மொரிபாத் மக்பூல் மற்றும் ஜசீம் பரூக் எனப்படும் அக்பர் என்றும், இவர்கள் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இதில் கொல்லப்பட்ட அக்பர் என்ற பயங்கரவாதி சஞ்சய் சர்மா என்பவரை கொலை வழக்கில் தொடர்புடையவர்.
இதுகுறித்து காஷ்மீர் கூடுதல் டிஜிபி தெரிவிக்கையில், “பாதுகாப்பு படையினர் உடனான சண்டையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மொரிபாத் மக்பூல் மற்றும் ஜசீம் பரூக் என்ற அக்பர் ஆகிய 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். காஷ்மீர் பண்டிட் சஞ்சய் சர்மா கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் அக்பர்” என்று கூறி இருக்கிறார்.