2-வது முனையத்தில் இருந்து இன்று முதல் விமான சேவை தொடங்கியது

பெங்களூரு: செப்டம்பர் . 12 – பெங்களூரு விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் இருந்து இன்று (செவ்வாய்க் கிழமை) முதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. பெங்களூரு விமான நிலையம் பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும், ெவளிமாநிலங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். சரக்குகள் கையாள்வதில் பெங்களூரு விமான நிலையம் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில் விமான போக்குவரத்து அதிகரிப்பால் மற்றொரு முனையத்தை மத்திய அரசு கட்டமைத்தது. ரூ.5 ஆயிரம் கோடி செலவில் சர்வதேச தரத்தில் 2-வது முனையம் கட்டப்பட்டது.
இந்த முனையத்தை கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விமான நிலையத்திற்கு பூங்கா முனையம் என்று பெயரிடப்பட்டது. திறப்பு விழாவுக்கு பிறகு முதல் முனையத்தில் இருந்து இயக்கப்படும் வெளிநாட்டு விமானங்கள் மற்றும் சில உள்நாட்டு விமானங்களை 2-வது முனையத்தில் இருந்து இயக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி முதல் 2-வது முனையம் செயல்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டது. எனினும் தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட சில காரணங்களுக்காக அன்றைய நாள் தொடங்க இருந்த சேவை தள்ளிவைக்கப்பட்டது. அதன்பிறகு செப்டம்பர் மாதம் 12-ந் தேதி (இன்று) 2-வது முனையம் செயல்பட தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகளையும் விமான நிலைய நிர்வாகம் மேற்கொண்டது. இந்த நிலையில் திட்டமிட்டப்படி பெங்களூரு விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து விமான நிலைய நிர்வாக அதிகாரி கூறுகையில், ‘நாளை (இன்று) பெங்களூரு விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் இருந்து காலை 10.45 மணிக்கு முதல் விமானம் புறப்பட உள்ளது. அதனை தொடர்ந்து விமான நிறுவனங்களின் கால அட்டவணைப்படி பிற விமானங்கள் இயக்கப்படும். 2-வது முனையத்தில் இருந்து அனைத்து பன்னாட்டு விமானங்களும், ஏர் ஏசியா, ஏர் இந்திரா, ஸ்டார் இந்தியா, விஸ்தாரா போன்ற நிறுவனங்களின் விமானங்களும் இயக்கப்படும். ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ, ஆகாசா ஏர் உள்ளிட்ட விமானங்கள் முதல் முனையத்தில் இருந்து வழக்கம்போல் இயக்கப்படும்’ என்றார்.