20 உடல்கள் மீட்பு, 40 இடங்களில் மீட்புப் பணி சிரமம்

தூத்துக்குடி: டிச.21-
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 20 பேர் இறந்துள்ளனர். மழை வெள்ளத்துக்கு 9 பேர் இறந்திருப்பதாக தமிழக அரசின் வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று காலையில் கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று மாலை வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 20 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
மழை வெள்ளத்தில் மூழ்கி 16 பேரும், சுவர் இடிந்து விழுந்து 2 பேரும், மின்சாரம் தாக்கி 2 பேரும் உயிரிழந்துள்ளனர். 20 பேரின் உடல்களும் முதலில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் முழுவதும் மழைநீரால் சூழப்பட்டுள்ளதால், மின்சாரம் இல்லை. ஜெனரேட்டர் மூலம் அத்தியாவசிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மின்சாரம் இல்லாததால் பிணவறையில் உடல்களை பாதுகாப்பாக வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடல்களை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட இலவச அமரர் ஊர்திகள் மூலம் உடல்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
40 இடங்களில் மீட்புப் பணியில் சிரமம்: தூத்துக்குடியில் வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் கோ.பிரகாஷ் கூறியது: “மத்திய ஆய்வு குழுவினர் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், காயல்பட்டினம் பகுதிகளை ஆய்வு செய்கின்றனர். ஆய்வின்படி இழப்பீடுகள் வழங்கப்படும். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு சேதாரம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. காலை வரை 9 பேர் இறந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. முழு சேதாரம், உயிரிழப்பு குறித்து தொடர்ந்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. முழுவிவரங்கள் விரைவில் தெரியவரும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 40 இடங்களுக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது. ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை போன்ற பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. தற்போது 10 ஹெலி காப்டர்கள் மூலம் அத்தியா வசிய பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது” என்றார் அவர்.
சிறிது நேரத்தில் கோரம்பள்ளம் சந்திப்பு பகுதியில் திரண்ட அப்பகுதிமக்கள், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதுபோல் அய்யனடைப்பு சந்திப்பு பகுதியில் அய்யனடைப்பு ஊராட்சிக்கு உட்பட்ட மக்களும், மறவன்மடம் சந்திப்பு பகுதியில் மறவன்மடம் ஊராட்சிக்கு உட்பட்ட மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி – திருநெல்வேலி சாலையில் போக்கு வரத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இரு மார்க்கங்களிலும் வந்த பேருந்துகள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்றன.
மாலை 4 மணியை தாண்டியும் 5 மணி நேரத்துக்கு மேலாக மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. எம்.பி., எம்எல்ஏ வரவேண்டும் எனக் கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால், சாலையை சீரமைத்து போக்குவரத்தை தொடங்கியும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.28 பேர் உயிரிழப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தில் மூழ்கி 16 பேர்,சுவர் இடிந்து விழுந்து 2 பேர், மின்சாரம் தாக்கி 2 பேர் என 20 பேர் உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் 8 பேர் உயிரிழந்தனர். திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 304 குடிசைகள் பகுதியாகவும், 206 குடிசைகள் முழுமையாகவும், 6 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.