200 தேர்தல் ஊழியர்கள் காணவில்லை

பிஜாப்பூர், (சத்தீஸ்கர்),நவ 9- சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளால் பாதித்த பகுதிகளில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட தேர்தல் பணியாளர்கள் காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தேர்தல் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் 200 தேர்தல் ஊழியர்கள் கதி என்ன என்று தெரியவில்லை. சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள பிஜாப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்ற 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர் இவர்கள் இப்போது காணாமல் போய் உள்ளனர். இவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை இதுவரை தேர்தல் கட்டுப்பாட்டு அரைக்கும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. பிஜாபூர் பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு செய்ய நக்சலைட்டுகள் அழைப்பு விடுத்து இருந்தனர். நக்சலைட்டுகள் அச்சுறுத்தலை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தனர் மேலும் மக்கள் சுதந்திரமாக வந்து வாக்களிக்க ஏற்பாடு செய்தனர். பல இடங்களில் ரகசிய வாக்குப்பதிவும் நடத்தப்பட்டது. குறிப்பிட்ட நேரங்களை ஒதுக்கி அந்த நேரங்களில் வாக்காளர்கள் வந்து வாக்குப்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டது. ஆனாலும்
பிஜாப்பூரில் 40.98 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன.வாக்குச்சாவடிக் குழுவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி ஊழியர்கள் தங்களது அறிக்கையை தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் சமர்ப்பிக்காதது கவலையளிக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஹெலிகாப்டர் மூலம் சில பணியாளர்கள் வாக்குச் சாவடி அருகே அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஊழியர்கள் காணாமல் போய் இருப்பது குறித்து
பதில் அளித்துள்ள பிஜாப்பூர் காவல் கண்காணிப்பாளர் ஆஞ்சநேய வைஷ்ணவ், வாக்குச் சாவடி ஊழியர்களை நக்சல்கள் கடத்திச் சென்றார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். 76 இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் ஓட்டுச் சாவடிகளுக்கு பணியாளர்களை அனுப்பியுள்ளோம். அவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு, என்றார்.
இதற்கிடையில், முதல் கட்ட வாக்குப்பதிவின் போது சுக்மா மாவட்டத்தில் உள்ள சிந்தகுபா காவல் நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நான்கு பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்.
நாராயண்பூர், பிஜப்பூர் மற்றும் காங்கர் மாவட்டங்களில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. ஆனால் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 200 தேர்தல் ஊழியர்கள் எங்கே உள்ளனர் என்பது குறித்து தீவிர தேர்தல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது