200 யூனிட் இலவச மின்சாரம் அமல்

கலபுர்கி, ஆக.5- கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள 5 உத்தரவாதங்களில் ஒன்றான கிரஹ ஜோதி யோஜனா திட்டத்தை முதல்வர் சித்தராமையா இன்று தொடங்கி வைத்தார்.
முதல்வர் சித்தராமையா கலபுர்கியில் உள்ள என்வி மைதானத்தில் திரளான கூட்டத்தின் மத்தியில் 10 பயனாளிகளுக்கு பூஜ்ஜிய பில்களை அடையாளமாக வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நாங்கள் சொன்னது போல் செய்துள்ளோம், 5 உத்திரவாத திட்டங்களை செயல்படுத்தி மக்களுக்கு கொடுத்த உத்தரவாதத்தை நிறைவேற்றி உள்ளோம் என்று முதல்வர் கூறினார். அப்போது பல்லாயிரக்கணக்கில் திரண்டு இருந்த மக்கள் ஆர்பரித்து கைதட்டி குரல் எழுப்பினர்
கிரஹ ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 1.41 கோடி குடும்பங்களுக்கு ஜூலை மாதத்திற்கான பூஜ்ஜிய மின்கட்டணம் வழங்கப்பட்டுள்ளது. ஜூலையில் இருந்து க்ரிஹ ஜோதி அமலுக்கு வந்துள்ளதாகவும், ஜூலை மாதத்திற்கான பில் ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட்டு வருவதாகவும், 200 யூனிட் மின்சாரம் பயன்படுத்திய அனைவருக்கும் ஜீரோ பில் வழங்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாதம் பதிவு செய்தவர்களுக்கு செப்டம்பரில் ஜீரோ பில் கிடைக்கும்.பதிவு செய்ய காலக்கெடு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
அன்னபாக்யா, கிரிஹஜோதி, கிரிலஹக்ஷ்மி மற்றும் சக்தி ஆகிய திட்டங்கள் ஏற்கனவே மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இளைஞர் நிதி திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.இதன் மூலம் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காங்கிரஸ் அரசு காப்பாற்றியுள்ளது.வாக்குறுதி அளித்தபடி நடந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார். இந்த விழாவில் முதல்வர் பேசும் போது உத்திரவாத திட்டங்களை கேலி கிண்டல் செய்து வந்த பிஜேபி கட்சி தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார் இந்த திட்டங்கள் நடைமுறைக்கு வராது என்று அவர்கள் கூறினார்கள் ஆனால் நாங்கள் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம் என்று ஆவேசமாக தெரிவித்தார்
காங்கிரஸ் கட்சி தேர்தலின் போது அறிவித்திருந்த ஐந்து உறுதியான வாக்குறுதிகளில் ஒன்றான ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கும் திட்டமான கிருஹ ஜ்யோதி திட்டத்தை முதல்வர் சித்தராமையா இன்று துவக்கி வைத்துள்ளார். நகரின் புதிய பள்ளிக்கூட மைதானத்தில் இன்று காலை 11 மணியளவில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் பத்து பயனாளிகளுக்கு பூஜ்ய எண்ணிக்கை மின் கட்டண ரசீதுகளை அளித்து இந்த திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே , துணை முதல்வர் டி கே சிவகுமார் , எரிபொருள் அமைச்சர் கே ஜெ ஜார்ஜ் , மருத்துவக்கல்வி துறை அமைச்சர் முனைவர் ஷரணப்ரகாஷ் பாட்டில் உட்பட பல அமைச்சர்கள் மற்றும் எம் எல் ஏக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டுள்ள 1.41 கோடி வீடுகளுக்கு ஜூலை மாத மின்சார பயன்பாட்டிற்கு பூஜ்ய நிலையில் மின்சார பில்கள் வழங்கப்பட உள்ளன. ஜூலை 25 வரை பெஸ்காமில் 20.21 லட்சம் , பேஸ்காமில் 54.99 லட்சம் , செஸ்காமில் 20.49 லட்சம் , ஹெஸ்காமில் 30.66 லட்சம் மெஸ்காமில் 14.53 லட்சம் மற்றும் ஹெச் ஆர் ஈ சி எஸ்ஸில் 76562 வீடுகள் இந்த திட்டத்தின்கீழ் இதுவரை பதிவாகியுள்ளன என கிராம அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ப்ரியாங்க் கார்கே தெரிவித்துள்ளார். தவிர இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில் ஆகஸ்ட் மாதத்தில் பதிவு செய்து கொண்டவர்களுக்கும் அடுத்த மாதத்திலிருந்து இந்த சலுகை கிடைக்கும். இன்று நடந்த நிகழ்ச்சியில் 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநிலத்தின் அனைத்து மாவட்ட அளவில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பயனாளிகளுக்கு பூஜ்ய மின்கட்டண ரசீதுகள் அளிக்கப்பட உள்ளது. இதே வேளையில் வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ பதவி படித்துள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு அரசு அறிவித்துள்ள மாத பென்ஷன் வழங்கும் திட்டத்திற்கும் நகல் அறிக்கை தயாராகிவருகிறது எனவும் அமைச்சர் ப்ரியங்கா கார்கே தெரிவித்தார்.