21 லட்சம் பேருக்கு விநியோகம்

சென்னை: டிச. 22- வெள்ள நிவாரணம் கோரி 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று வரை 21 லட்சம்பேருக்கு ரூ.6 ஆயிரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரணமாக, ரூ.6 ஆயிரம் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், சென்னையில் அனைத்து வட்டங்களிலும், மற்ற 3 மாவட்டங்களில் குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட வட்டங்களிலும் வசிப்போருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இதுதவிர, மத்திய, மாநில அரசுஉயர் அதிகாரிகள், வருமான வரிசெலுத்துவோர், சர்க்கரை குடும்பஅட்டைதாரர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், பாதிப்பை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, டிச.14-ம் தேதிமுதல் பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டிச.17-ம் தேதி சென்னை வேளச்சேரியில் ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, 24.75 லட்சம் பேருக்கு நிவாரணம் வழங்க ரூ.1,437 கோடிஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இன்றுடன் டோக்கன் பெற்றவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு, நாளை ஒருநாள் விடுபட்டவர்களுக்கு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், நேற்றுகாலை நிலவரப்படி 21 லட்சம் பேருக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.