22 அமெரிக்கர்கள் உயிரிழப்பு

வாஷிங்டன்: அக்டோபர் . 13 – இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலில் 22 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 17 பேரை காணவில்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா நகரில் ஆதிக்கம் செலுத்தும் ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. கடந்த 6 நாட்களாக ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போர் நீடித்து வருகிறது.
தாக்குதல் தொடங்கிய முதல் நாளில் ஹமாஸ் அமைப்பினர் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் மக்களைபிணைக்கைதியாக பிடித்துச் சென்றனர். இஸ்ரேல் ராணுவம் வீசும்ஒவ்வொரு குண்டுக்கும் ஒருபிணைக் கைதியைக் கொல்வோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டவர்களில் அமெரிக்கர்களும் உள்ளனர். இந்நிலையில் பிணைவைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களை மீட்கும் பணியில் அமெரிக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறுகையில், “ இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 17பேரை காணவில்லை. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும். ஹமாஸ் அமைப்பினர் அமெரிக்கர்களையும் பிணைக்கைதியாக வைத்துள்ளனர். அவர்களை மீட்பது குறித்து இஸ்ரேலுடன் அமெரிக்க அரசு தொடர்ந்து பேசி வருகிறது” என்று தெரிவித்தார்.