24 மணி நேரத்துக்குள் ஒரு நாள் சுழற்சியை முடித்துள்ள பூமி

நியூயார்க், ஆக. 1-
பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கு 365 நாட்கள் எடுத்து கொள்கிறது. தன்னைத் தானே சுற்றி கொள்வதற்கு 24 மணி நேரம் ஆகிறது. இந்நிலையில் சமீபகாலமாகவே பூமி அதன் சுற்றும் வேகத்தை அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 1960-ம் ஆண்டுக்கு பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு பூமியில் குறுகிய மாதம் பதிவானது. 2020 ஜூலை 19-ந் தேதி மிகவும் குறுகிய நாள் பதிவானது. அன்றைய தினம் வழக்கமான 24 மணி நேர நாளை விட 1.47 மில்லி வினாடிகள் குறைவாக இருந்தது.
அதாவது அன்றைய தினம் பூமி வழக்கத்தை காட்டிலும் வேகமாக சுற்றி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதன்பிறகும் பூமியின் சுழற்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
ஆனால் குறிப்பிடத்தக்க சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. இந்நிலையில் கடந்த ஜூலை 29-ந் தேதி பூமியானது வழக்கத்துக்கு மாறாக 1.59 மில்லி வினாடிகள் முன்னதாகவே தனது சுழற்சியை நிறைவு செய்துள்ளது.
இதன் மூலம் மிக குறுகிய நாள் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்குக்கு சற்று அதிகம் ஆகும். என்றாலும் 1.59 மில்லி வினாடிகள் கூட பூமியின் சுழற்சியில் மிக முக்கியம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனை சரிகட்ட ஒருங்கிணைந்த யூனிவர்சல் டைம் (யு.டி.சி) ஏற்கனவே 27 முறை லீப் நொடிகளை மாற்றி அமைத்துள்ளது. இப்பொழுது மீண்டும் அதனை மாற்றி அமைக்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்போது தான் தொலை தொடர்பு சாதனங்களிலும், உலக அளவிலும் நேரத்தை சரியாக கணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.