25 கோடி நகை மாயம்: துப்புதுலக்கும் டெல்லி காவல்துறை

புதுடெல்லி செப். 27-
இந்திய தலைநகர் புது டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது ஜங்க்புரா. ஜங்க்புராவில் உயர் நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி போகல். இங்குள்ள பிரபல நகைக்கடை உம்ராவ் ஜுவல்லர்ஸ். இக்கடை 4 தளங்களை கொண்டது. இக்கடைக்கு வாராந்திர விடுமுறை நாள் திங்கட்கிழமை என்பதால் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை விற்பனை நடைபெற்றது. அதற்கு பிறகு விற்பனை நேரம் முடிந்ததும், கடை உரிமையாளர் கடையை பூட்டி விட்டு சென்றார். இக்கடையை கொள்ளையடிக்க நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்த கொள்ளையர்கள், ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்திற்கு மேல், கடை மூடியிருந்த நேரத்தில் கடையின் மேற்கூரைக்கு எப்படியோ வந்தனர். அங்கிருந்து தரைப்பகுதிக்கு வந்திறங்கினர்.
முன்னதாக அக்கடையின் கண்காணிப்பு கேமிராக்களை திருடர்கள் செயலிழக்க செய்தனர். அதற்கு பிறகு அக்கடையின் தரைதளத்தில் உள்ள “ஸ்ட்ராங் ரூம்” எனப்படும் பாதுகாப்பு பெட்டக அறையில் துளையிட்டனர். அங்கு வைக்கப்பட்டிருந்த நகைகளையும்,
வெளியில் ஷோ ரூமில் இருந்த நகைகளையும் கொள்ளையடித்து சென்றனர். இன்று காலை கடையை திறந்து பார்த்த உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கடையில் இருந்த அனைத்து நகைகளும் பறி போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அவர்கள் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் விசாரணைக்கு வந்தனர். கொள்ளையர்கள் செயலிழக்க செய்யும் முன்பு வரை கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். எவரையும் காவலில் எடுக்கவில்லை என்றும் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்று அரியானாவில் உள்ள அம்பாலாவில் ஒரு கூட்டுறவு வங்கியில் இதே போன்று துளையிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.