25 லட்சம் வீடுகளுக்கு மின்இணைப்பு

சென்னை:மார்ச் 4:
‘பிரதமரின் சூரியவீடு: இலவச மின்சாரம்’ திட்டத்தை தமிழகத்தில் முழுவீச்சில் செயல்படுத்தும் நடவடிக்கையில் மின்வாரியம் தீவிரமாக இறங்கியுள்ளது. அடுத்த ஓராண்டுக்குள் 25 லட்சம் வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்வாரியத்துக்கு 30 முதல் 40 சதவீதம் அளவுக்கு செலவு குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியசக்தி மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்ற பசுமை எரிசக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்ய மாநில அரசுகளை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. பொதுமக்களும் இத்திட்டத்தில் பயனடையும் வகையில், அவ்வப்போது மானிய திட்டங்களையும் அறிவித்து வருகிறது.அந்த வகையில், ‘பிரதமரின் சூரியவீடு இலவச மின்சாரம்’ (சூர்யகர் முப்தி பிஜிலி யோஜனா) என்ற திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு இலவச சூரியசக்தி மின்சாரம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. ரூ.75 ஆயிரம் கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் இத்திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்தும் நடவடிக்கையில் மின்வாரியம் தீவிரமாக இறங்கியுள்ளது. இத்திட்டத்தின்கீழ், தமிழகத்தில் அடுத்த ஓராண்டுக்குள் 25 லட்சம் வீடுகளுக்கு சூரிசக்தி மின்இணைப்பு வழங்க தமிழ்நாடு மின்வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அத்துடன், இத்திட்டத்தை செயல்படுத்துவதால், தனியாரிடம் இருந்து நிலக்கரி மற்றும் மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான செலவு, மின்வாரியத்துக்கு கணிசமாக மிச்சமாகும் என்று கூறப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ், தமிழகத்தில் அடுத்த ஓராண்டுக்குள் 25 லட்சம் வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 12 மின்வாரிய மண்டலங்களில் உள்ள 2,837 பிரிவு அலுவலகங்கள் மூலம் தலா ஓர் அலுவலகத்துக்கு 1,000 இணைப்புகள் வீதம் சூரியசக்தி மின்இணைப்பு வழங்கப்படும். இதுதொடர்பாக தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.