250 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் மீட்பு

டெல் அவிவ்: அக்டோபர் : 14 ஹமாஸ் தீவிரவாதிகளிடம் சிக்கியிருந்த 250 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை இஸ்ரேல் கடற்படை வீரர்கள் நேற்று மீட்டனர். அப்போது 60 ஹமாஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த 7-ம் தேதி ஏராளமான இஸ்ரேலியர்களை, ஹமாஸ் தீவிரவாதிகள் சிறைபிடித்து சென்றனர். அவர்கள் காசா பகுதியில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இந்த சூழலில் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம்நடத்திய வான் வழி தாக்குதல்களில் 13 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் உயிரிழந்து விட்டதாக ஹமாஸ் அமைப்பு நேற்று அறிவித்தது.
காசாவின் தெற்கில் சுஃபா சோதனை சாவடி பகுதி உள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பகுதியில் இஸ்ரேல் கடற்படையின் புளோடில்லா 13 என்ற சிறப்புப் படை வீரர்கள் நேற்று அதிரடியாக நுழைந்தனர்.
அங்குள்ள ஒரு கட்டிடத்தில் சுமார் 60 ஹமாஸ் தீவிரவாதிகள் பதுங்கி இருந்தனர். அவர்களை சுற்றி வளைத்த இஸ்ரேல் வீரர்கள்,அனைவரையும் சுட்டுக் கொன்றனர். பின்னர் ஒவ்வொரு அறையாக சோதனை செய்தனர். அந்த அறைகளில் அடைக்கப்பட்டிருந்த 250 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் மீட்கப்பட்டனர். இதுதொடர்பான வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.இஸ்ரேலை சேர்ந்த 120 குடும்பங்கள் தங்களது உறவினர்கள் பலரை காணவில்லை என்று உள்ளூர் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளன. அவர்களின் முழுவிவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் ஹமாஸ் தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ள அவர்களை மீட்க இஸ்ரேல் ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது.

இஸ்ரேல் தூதரக ஊழியர் மீது தாக்குதல்: பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் வாழும் மக்கள் குரல் எழுப்ப வேண்டும் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் அழைப்பு விடுத்திருந்தனர். இதையேற்று வளைகுடா நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளில் நேற்று முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் செயல்படும் இஸ்ரேல் தூதரகத்தின் ஊழியர் ஒருவர் நேற்று சந்தைக்கு சென்றார். அப்போது மர்ம நபர் ஒருவர், அவரை கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.