2,500 வகை உணவுகள் – ரூ.1,250 கோடியில் அம்பானி இல்ல திருமண முன்வைபவம்

ஜாம்நகர், மார்ச். 4- தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண முன்வைபவம் குஜராத்தின் ஜாம்நகரில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இதில் 1,000 பிரபலங்கள் பங்கேற்றனர். 2,500 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. ஒட்டு மொத்தமாக ரூ.1,250 கோடி செலவிடப்பட்டு உள்ளது.தொழிலதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதிக்கு இருமகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் ஆகாஷ், மகள் இஷாஇரட்டையர்கள் ஆவர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. கடைசி மகன் ஆனந்துக்கும் (28) ராதிகா மெர்ச்சென்டுக்கும் (29) கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் வரும் ஜூலை 12-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த சூழலில் கடந்த 1-ம் தேதி திருமண முன்வைபவ நிகழ்ச்சிகள் குஜராத்தின் ஜாம்நகரில் தொடங்கியது. இது முகேஷ் அம்பானியின் தாய் கோகிலா பென்னின் சொந்த ஊர் ஆகும். இங்கிருந்துதான் அம்பானி குடும்பத்தினர் தங்கள் தொழிலை தொடங்கினர். ஜாம்நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும் 3,000 ஏக்கரில் ‘வந்தாரா’ என்ற புதிய வனத்தையும் அம்பானி குழுமம் உருவாக்கி உள்ளது. இங்குதான் ஆனந்த் அம்பானி திருமண முன்வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஜாம்நகரில் உள்ள விமான நிலையம் 10 நாட்களுக்கு மட்டும் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டது. நாள்தோறும் 140 விமானங்கள் ஜாம்நகர் விமான நிலையத்தில் தரையிறங்கின. ரூ.75 கோடியில் இசை கச்சேரி: கடந்த 1-ம் தேதி முதல் நாள் நிகழ்ச்சியில் அமெரிக்க பாப் பாடகியும் நடிகையுமான ரிஹானாவின் இசைக்கச்சேரி நடைபெற்றது. இந்த இசை கச்சேரிக்காக மட்டும் ரூ.75 கோடி செலவிடப்பட்டது. இரண்டாம் நாளில் விருந்தினர்கள் அனைவரும் ஜாம்நகரில் உள்ள 3,000 ஏக்கர் வனத்தை சுற்றி பார்த்தனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மூன்றாம் நாளான நேற்று வந்தாராவனப்பகுதியில் உள்ள யானைகளை பார்க்க விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். மாலையில் இசைக்கச்சேரி, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.