260 வீடியோ வாகனங்களுக்கு அனுமதி

சென்னை: ஏப் .12: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் தேசிய, மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களவை பொதுத்தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து,
தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் பணியாளர்களுக்கான அடுத்தகட்ட பயிற்சி நாளை (ஏப்.13) நடைபெறுகிறது.
அதேநேரத்தில், வாக்குப்பதி வுக்கு இன்னும் 7 நாட்களே இருப்பதாலும், அதில் 6 நாட்கள் மட்டுமே பிரச்சாரம் செய்ய முடியும் என்பதாலும், திமுக, அதிமுக, பாஜக கூட்டணிக் கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், காலையில் 6 மணிக்கு தொடங்கி, 10 மணிக்கு முன்னதாக பிரச்சாரத்தை நிறைவு செய்கின்றனர். பின்னர், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை தெருக்கள் வாரியாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 2 நாட்கள் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மற்றும் ஒரு நாள் ஓய்வு என்ற அடிப்படையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
சுவிதா’ செயலி: தலைவர்கள் பிரச்சாரம், ரோடு ஷோ நடத்தும் வாகனங்கள், எல்இடி திரை பொருத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கான அனுமதி ஆகியவற்றுக்கு `சுவிதா’ செயலி மூலம் தலைமை தேர்தல் அதிகாரியிடம் அரசியல் கட்சிகள் விண்ணப்பித்து, அனுமதி பெற்றுள்ளன. அந்த வகையில், இதுவரை 260 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள் ளது. திமுகவுக்கு 83, பாஜகவுக்கு 55, அதிமுகவுக்கு 91, பாமகவுக்கு 11, காங்கிரஸ் கட்சிக்கு 20 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.