27ம் தேதி சசிகலா விடுதலை

பெங்களூர், ஜன. 13- சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருக்கும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை ஆகிறார்.இதற்கான ஏற்பாடுகளை பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் செய்து வருகிறது. இதையடுத்து பெங்களூர் முதல் சென்னை வரை சசிகலா ஆதரவாளர்கள் பிரம்மாண்ட தடபுடல் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். வரும் 27ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் இருந்தும் சசிகலா ஆதரவாளர்கள் பல ஆயிரக்கணக்கான வாகனங்களில் பெங்களூர் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை கர்நாடக அரசு செய்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கினார்.
இதை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகியது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி 4 பேரையும் குற்றவாளிகள் இல்லை என்று கூறி விடுதலை செய்தார்.
கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் 4 பேரின் வருவாய்க்கு அதிகமான சொத்து கணக்கு கூட்டலில் தவறு இழைத்து விட்டதாக அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி, ஜெயலலிதா மறைந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதா இறந்து விட்டதால் அவரை வழக்கில் இருந்து நீக்கிய உச்சநீதிமன்றம், மற்ற 3 பேருக்கும் குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல், பெங்களூர் நகரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டு உள்ளனர். அடுத்த ஆண்டு, தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக சசிகலா விடுதலை ஆவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. நன்னடத்தை அடிப்படையில் அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில்தான் பெங்களூரைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி சிறைச்சாலையில் சசிகலா கழித்த நாட்கள் தொடர்பான விபரங்களை பெற்றுள்ளார். அதில், 14.2.2021ம் தேதியோடு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை காலம் முடிவு பெறுகிறது. 6.10.2017 முதல் 12.10.2017 வரை 5 நாள்களும், 20.3.2018 முதல் 31.3.2018 வரை 12 நாள்களும் பரோலில் சசிகலா வெளியே வந்துள்ளார்.
மொத்தம் 17 நாள்கள் வெளியே வந்திருக்கிறார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பரோல் தினத்தையும் கூட்டினால், 2021 மார்ச் 3ம் தேதி சசிகலா ரிலீஸ் ஆக வேண்டியிருக்கும். ஆனால், ஏற்கனவே இதே வழக்கில் சசிகலா 35 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அந்த நாட்களை கழித்தால், ஜனவரி 27ம் தேதி சசிகலா ரிலீஸ் ஆகிறார்.
ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக உள்ளார். கோடை காலத்தில்தான் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக சசிகலா விடுதலை ஆவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சசிகலா உறவினர் சுதாகரன் சஷிகலாவுக்கு முன்பே
விடுவிக்கப்பட வேண்டியிருந்தது. ஆனால், ரூ.10 கோடி அபராதம் செலுத்த வேண்டும் எனவே சசிகலாவுடன் வெளியேற அவர் திட்டமிட்டுள்ளார். சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரும் சிறையில் இருந்து விடுதலை ஆவார்கள் என தெரிகிறது.