28 நாள் இடைவெளியில் 2 முறை தடுப்பூசி: மத்திய அரசு

புதுடில்லி, ஜன. 13- கொரோனா தடுப்பூசி, 28 நாள் இடைவெளியில், இரண்டு முறை போடப்படும். தடுப்பு மருந்து செலுத்தி, 14 நாட்களுக்கு பின், பலன் தெரியும்’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி பற்றி, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது: ஒவ்வொருவருக்கும், 28 நாள் இடைவெளியில், இரண்டு முறை தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போடப்பட்டு, 14 நாட்களுக்கு பின், அதன் பலன் தெரியும். மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள இரண்டு தடுப்பூசிகளும், பாதுகாப்பு மிக்கவை என, மருத்துவரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் இயக்கம், 16ல் துவங்க உள்ளது. இதற்காக, நாட்டின், 13 முக்கிய நகரங்களுக்கு, நேற்று மட்டும், 56 லட்சம், ‘டோஸ்’ புனேயில் உள்ள, சீரம் நிறுவனத்தின் ஆலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள், இதன் வாயிலாக வேகம் எடுத்துள்ளன.