28-ந்தேதி மோடியை தனித்தனியே சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ்.

சென்னை: ஜூலை. 26 – அ.தி.மு.க.வில். அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையே ஏற்பட்டுள்ள போட்டி உச்சகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளில் 98 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பதால் அவரது கை அ.தி.மு.க.வில் ஓங்கி உள்ளது. ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டதால் அவரது அணியில் மூத்த தலைவர்கள் யாரும் இல்லாத நிலைதான் உள்ளது. என்றாலும் அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொண்டு உள்ளார். தலைமை தேர்தல் ஆணையம், கோர்ட்டு, சட்டசபை, வங்கிகள், காவல்துறை ஆகிய ஐந்து வகைகளில் எடப்பாடி தரப்பு மீது ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் அடுத்தடுத்து பல்வேறு வகையான இடையூறுகளை உருவாக்கி உள்ளனர். இந்த ஐந்து வகையான மோதல்களில் இதுவரை இரு தரப்புக்கும் முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. தற்போதைய சூழ்நிலையில் சீல் வைக்கப்பட்ட அ.தி.மு.க. தலைமை கழகம் மீண்டும் எடப்பாடி பழனிசாமி வசம் வந்துள்ளது. அதுபோல அ.தி.மு.க. நிர்வாகத்தை மேற்கொள்ள வரவு-செலவு செய்வதற்கான வங்கி கணக்குகளை இயக்கும் அதிகாரமும் அவருக்கு கிடைத்து உள்ளது. அடுத்தக்கட்டமாக தேர்தல் ஆணையம் மற்றும் கோர்ட்டு ஆகியவையும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக முடிவு எடுக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். அத்தகைய நிலை ஏற்பட்டால் அ.தி.மு.க.வுக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற நிலை உருவாகி விடும் என்பதால் ஓ.பன்னீர்செல்வம் அடுத்தடுத்து சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி போட்டி அ.தி.மு.க.வை உருவாக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறார். போட்டி அ.தி.மு.க.வை உருவாக்க வேண்டுமானால் கட்சியில் அனைத்து பிரிவுகளிலும் நிர்வாகிகள் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதால், தனது ஆதரவாளர்களை நியமனம் செய்து அறிவித்து வருகிறார். அதற்காக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்குவதாகவும் அவர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களை, எடப்பாடி பழனிசாமி நீக்கி வருகிறார். இரு தரப்பினரும் போட்டி போட்டு நிர்வாகிகளை நியமனம் செய்வதும், நீக்குவதுமாக இருப்பதால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலை உருவாகி உள்ளது. அ.தி.மு.க.வில் சர்ச்சை ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியதும், அவருக்கு ஆதரவாக கூட்டணி கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சியும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் முடிவெடுத்தன. ஆனால் அ.தி.மு.க.வின் முக்கிய கூட்டாளியான பாரதிய ஜனதா கட்சி இந்த விசயத்தில் இன்னமும் மதில் மேல் பூனையாகவே உள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரது ஆதரவை பெற்று தங்களது நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தீவிரமாக உள்ளனர். இதை கருத்தில் கொண்டுதான் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்தவார இறுதியில் டெல்லிக்கு சென்றார். புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டுவிட்டு அப்படியே பிரதமர் மோடியையும் சந்தித்து பேச வேண்டும் என்று அவர் திட்டமிட்டு இருந்தார். அவரது இந்த திட்டம் வெற்றி பெறவில்லை. டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் அ.தி.மு.க. இரு அணிகளாக இயங்குவதை விரும்பவில்லை. ஒன்றுபட்ட வலுவான கட்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனவே பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொண்டு சமரசமாக செல்ல முடியாதா என்று அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். பா.ஜ.க. மூத்த தலைவர்களின் இந்த மனநிலையை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் விரும்பவில்லை. அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வத்தை சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்பதை திட்டவட்டமாக பா.ஜ.க. மேலிடத்தில் தெரிவித்து உள்ளனர். இதில் பிரதமர் மோடி என்ன முடிவெடுக்க போகிறார் என்பது புரியாத புதிராக உள்ளது. இந்தநிலையில் பிரதமர் மோடி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடக்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக சென்னை வர உள்ளார். அன்று மதியம் குஜராத் மாநிலத்தில் இருந்து தனி ராணுவ விமானத்தில் புறப்பட்டு வரும் அவர் அன்று மாலை நேரு விளையாட்டு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இரவு 8 மணி வரை அவர் அந்த நிகழ்ச்சியில் இருப்பார் அதன்பிறகு அவர் கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று அங்கு இரவு தங்க உள்ளார். அன்று இரவு 8.30 மணியில் இருந்து முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்த அவர் திட்டமிட்டு உள்ளார். அப்போது எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை தனித்தனியாக சந்தித்து பேசுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்புக்கு பிறகே எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரது அடுத்த கட்ட நடவடிக்கைகளில் எத்தகைய மாற்றம் ஏற்படும் என்பது தெரியவரும். எனவே நாளை மறுநாள் இரவு நடக்கப்போகும் சந்திப்பு அ.தி.மு.க.வில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.