2841 பேர் போட்டி

திருமலை: மே 2: ஆந்திராவில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் மொத்தம் 2,841 பேர் போட்டியிடுகின்றனர்.ஆந்திராவில் வரும் 13ம் தேதி ஒரே கட்டமாக 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.
ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனியாகவும், தெலுங்கு தேசம், பாஜ, ஜனசேனா கட்சிகள் ஒரு அணியாகவும், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன. தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து கடந்த 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. நேற்று முன்தினம் மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட உள்ளவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையர் முகேஷ்குமார் மீனா நேற்றிரவு வெளியிட்டார்.
அதன்படி 25 மக்களவை தொகுதிக்கு 454 பேரும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு 2,387 பேரும் போட்டியிடுகின்றனர். விசாகப்பட்டினம் மக்களவை தொகுதியில் அதிகபட்சமாக 33 வேட்பாளர்களும், ராஜமுந்திரி மக்களவை தொகுதியில் குறைந்தபட்சம் 12 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.