2974 ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரை

பெங்களூரு, ஜன. 10: ஆபத்தான சாலை விபத்துகளில் ஈடுபட்டு, சாலை போக்குவரத்து விதிகளை மீண்டும், மீண்டும் மீறுவதாக அடையாளம் காணப்பட்ட வாகன ஓட்டிகளுக்கான உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, பெங்களூரு போக்குவரத்து காவல்துறை 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 2,974 ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரை செய்துள்ளது.
பரிந்துரை செய்யப்பட்ட அனைத்து உரிமங்களும், நகரம், மாநிலத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள அதிகார எல்லைக்குட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு, தேவையான இடங்களில் இடைநிறுத்துவதற்காக அனுப்பப்பட்டுள்ளன.
இவற்றில், மொத்தம் 711 உரிமங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன, மீதமுள்ளவை இடைநீக்கச் செயல்பாட்டில் உரிய நடைமுறைக்காக காத்திருக்கின்றன.
10க்கும் அதிகமாக‌ போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மற்றும் அபாயகரமான விபத்துகளில் ஈடுபட்ட அனைவரின் உரிமங்களும் இடைநீக்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானோர் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் என்று காவல்துறை இணை ஆணையர் (போக்குவரத்து) எம்.என்.அனுசேத் தெரிவித்தார்.