3வது அலை தடுக்க தயார் நிலை

பெங்களூர், ஜூன் 10- கொரோனா மூன்றாவது அலை பரவாமல் தடுப்புக்கு எல்லாவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம். இரண்டாவது அலை தடுப்புக்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கை போல் துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று, பெங்களூரு மாநகராட்சி ஆணையர் கவுரவ் குப்தா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது-
கொரோனா மூன்றாவது அலை பரவும் ஆபத்துள்ள வேளையில் இப்போதிருந்தே இதன் தடுப்புப் பணிகளை மேற் கொண்டு வரப்படுகிறது. இரண்டாவது அலை தடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெங்களூர் நகரில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. ஊரடங்கு தளர்த்துவது குறித்து முதல்வர் எடியூரப்பா பரிசீலனை நடத்தி வருகிறார்.
இது தொடர்பாக முழுமையாக பரிசீலனை செய்து நல்ல முடிவை முதல்வர் எடுப்பார். ஊரடங்கு தளர்த்த படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்வதாக அரசுத்தரப்பில் தெரியவந்துள்ளது. முதல்வர் எடியூரப்பா மேற்கொண்ட ஆலோசனையில் பெருநகர் பெங்களூர் மாநகராட்சி தரப்பில் அதிகாரிகள் தங்களது கருத்துக்களையும் வெளிப்படுத்தி கொரோனா தொற்று மேலும் குறைய வேண்டும் என்பதற்கு நடவடிக்கைகள் தேவை என்பதை வலியுறுத்தி இருக்கிறோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.