3வது நாளாக பிரதமர் மோடி தியானம்

கன்னியாகுமரி: ஜூன்.1-
கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி 45 மணி நேர தியானத்தை நேற்று முன்தினம் மாலை தொடங்கினார். இன்று மூன்றாவது நாளாக தியானத்தை தொடர்ந்து வருகிறார் பிரதமர் மோடி.
மக்களவைத் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் ஜூன் 4ஆம் தேதி நாடு முழுவதும் லோக்சபா வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார் பிரதமர் மோடி. கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொண்டு வருகிறார் பிரதமர் மோடி.
சுவாமி விவேகானந்தர் இதே விவேகானந்தர் பாறையில் கடந்த 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை 3 நாட்கள் தியானம் செய்தார். அதே இடத்தில் தான் தற்போது விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ளது. அங்குள்ள விவேகானந்தர் தியான மண்டபத்தில் தான் பிரதமர் மோடி 3 நாள் தியானம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று மூன்றாவது நாளாக தியானத்தை தொடர்கிறார் பிரதமர் மோடி. ஒரே இடத்தில் அமர்ந்து தியானம் மேற்கொண்டு வருகிறார் மோடி. இன்று பிற்பகல் வரை வரை 45 மணி நேரம் பிரதமர் மோடி தியானம் செய்கிறார். தியான மண்டபத்தில் இருந்து மாலை 3.30 மணியளவில் அவர் வெளியே வருகிறார். தியானத்தின் நிறைவாக 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்த தனிப் படகில் பிரதமர் மோடி செல்கிறார். பின்னர் அவர் கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச் செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி செல்கிறார்.
இன்று காலையில் சூரிய நமஸ்காரம் செய்வதற்காக தியானத்தை நிறுத்திவிட்டு வெளியே வந்துள்ளார் பிரதமர் மோடி. கடுமையான மேகமூட்டம் காரணமாக சூரிய நமஸ்காரம் செய்யாமல் மீண்டும் உள்ளே சென்று தியானத்தை தொடர்ந்து வருகிறார். பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொண்டுள்ளதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. காந்தி மண்டபம், விவேகானந்தர் மண்டபம் உட்பட அனைத்து பகுதிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், மத்திய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கடல் பகுதியில் கப்பற்படை கப்பலும் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.