3வது மாடியில் இருந்து மனைவியை தள்ளிவிட்டு கொலை செய்த கணவர்

உத்தரப்பிரதேசம், ஜன. 4- மாநிலம் எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் குமார். தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் எட்டு வயது மகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜீவ் குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இருவருக்கிடையே பிரச்சினை முற்றியதை அடுத்து, ராஜீவ் குமார் தனது மனைவியின் கழுத்தை பிடித்து தரதரவென இழுத்து வந்து மூன்றாவது மாடியில் இருந்து தள்ளிவிட்டுள்ளார்.
இதில், அந்த பெண் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக மகளிடம் விசாரித்தபோது, அவரது தந்தைக்கும் தாய்க்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும், தந்தைதான் தாயை மாடியில் இருந்து தள்ளிவிட்டார் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான ராஜீவ் குமாரை தேடி வருகின்றனர்.