3வது முறை ஆட்சி அமைப்போம்- பிரதமர் மோடி நம்பிக்கை

புதுடெல்லி, ஜூன் 4-
பாராளுமன்ற தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி, சப்கா சாத் சப்கா விகாஸ் என்ற நோக்கத்திற்கான வெற்றியாகும். இது நாட்டின் 140 கோடி மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்றும், தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைப்பேன் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தேசிய தலைநகர் புது தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வெற்றி நிகழ்ச்சியில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றினார்.
முதலில் தனது நன்றியை தெரிவித்த மோடி, தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்கப் போவதாக தெரிவித்தார். இம்முறை தேர்தல் வெற்றி ஜனநாயகத்தின் வெற்றி, சப்கா சாத், சப்கா விகாஸ் என்ற மந்திரத்தின் வெற்றி என அவர் குறிப்பிட்டார்.பிஜேபி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். 1962-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து 3-வது முறையாக அரசு வெற்றி பெறுவது இதுவே முதல்முறை என்றும், நாடு முழுவதும் சுமூகமான தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இவ்வளவு பெரிய அளவிலான தேர்தலை நடத்திய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. இந்தியாவின் தேர்தல் முறை மற்றும் முறையின் நம்பகத்தன்மை குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கிறார்கள் என்றார்.
இதனிடையே, ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைக் குறிப்பிட்டு, “ஒடிசாவில் நாங்கள் ஆட்சி அமைக்கிறோம்” என்றார். மகாபிரபு பூமியில் பாஜக முதல்வராகப் போவது இதுவே முதல் முறை.
மக்களின் கனவுகளை நனவாக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் பிரதமர் கூறினார்