Home Front Page News 3 சிறுவர்கள் கைது

3 சிறுவர்கள் கைது

கிருஷ்ணகிரி, பிப்ரவரி 21-
கிருஷ்ணகிரியில் சாலையில் நடந்து சென்ற தனியார் பள்ளி ஆசிரியரைத் தாக்கி செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துச் சென்ற 3 சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் டேவிட் ராஜன் (57). தனியார் பள்ளி ஆசிரியரான இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்குக் கடந்த 18-ம் தேதி வந்தார். நண்பரைப் பார்த்துவிட்டு, நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் காஞ்சிபுரம் செல்ல கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்துக்கு, பெங்களூரு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த 3 சிறுவர்கள் டேவிட் ராஜனை வழிமறித்து கல்லால் தாக்கி அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பினர்.
அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த போலீஸார், படுகாயமடைந்த டேவிட் ராஜனை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிசிசைக்குச் சேர்த்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும், டேவிட் ராஜனைக் கல்லால் தாக்கிய 13, 15 மற்றும் 16 வயதுள்ள 3 சிறுவர்களைப் போலீஸார் கைது செய்து, சேலம் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, டேவிட் ராஜனை, 3 சிறுவர்கள் வழிமறித்து கல்லால் தாக்கும் காட்சிகள் பெங்களூரு சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

Exit mobile version