Home Front Page News 3 டிரைவர்கள் உட்பட4 பேர் உயிரிழப்பு

3 டிரைவர்கள் உட்பட4 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: ஜன. 27: பர்கூர் அருகே லாரிகள் மோதியதில் 3 ஓட்டுநர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். லாரியில் ஏற்றி வரப்பட்ட இரு எருமை மாடுகளும் உயிரிழந்தன.
மகாராஷ்டிரா மாநிலம் பந்தா பூர் அருகேயுள்ள கதிரியைச் சேர்ந்தவர் நாராயணன் (45). ஓட்டுநரான இவர், மகாராஷ்டிராவிலிருந்து சென்னை கோயம்பேட்டுக்கு லாரியில் வெங்காயம் பாரம் ஏற்றிக் கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக வந்து கொண்டிருந்தார்.
நேற்று அதிகாலை கிருஷ்ணகிரி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பர்கூர் அருகே அத்திமரத்துப்பள்ளம் பகுதியில் வந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு, எதிரே ஆந்திர மாநிலத்திலிருந்து கோவைக்கு எருமை மாடுகளை ஏற்றி வந்த லாரி மீது மோதியது. அதேநேரம், மாடுகளை ஏற்றி வந்த லாரியின் பின்னால் வந்த சரக்கு வாகனம் லாரியின் பின்னால் மோதி, சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வெங்காய பாரம் ஏற்றிய லாரி ஓட்டுநர் நாராயணன், எருமை மாடுகளை ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் திண்டுக்கல் அருள்ஜோதி (54), உடன் வந்த மாற்று ஓட்டுநர் ஒட்டன்சத்திரம் மணிகண்டன் (35) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
மாடுகளை ஏற்றிவந்த லாரியில் வந்த ஆந்திர மாநிலம் நந்திபாளையம் ராஜேஷ் (31), காதர் பாஷா (56), விஜயபாபு (34), வெங்காயம் பாரம் ஏற்றிய லாரியில் வந்த மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரைச் சேர்ந்த கரீம் சபீர் பகவான் (38) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே கரீம் சபீர் பகவான் உயிரிழந்தார். மற்ற 3 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும், இவ்விபத்தில் 2 எருமை மாடுகள் உயிரிழந்தன. சில மாடுகளுக்குக் காயம் ஏற்பட்டது. அவற்றுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். உயிரிழந்தோரின் சடலங்கள் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விபத்து தொடர்பாக பர்கூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version