3 நாட்கள் ரெயில் மறியல்

அமிர்தசரஸ்: செப்.29-
பயிர்க்கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக பஞ்சாப் மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகள் ஏற்கப்படாததை தொடர்ந்து நேற்று அவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 3 நாள் ரெயில் மறியல் போராட்டத்தை தொடங்கினர். ரெயில் தண்டவாளங்களில் ஆயிரக்கணக்கில் அமர்ந்து இருந்த அவர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டம் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் தொடரும் என விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.
விவசாயிகளின் இந்த ரெயில் மறியல் போராட்டத்தால் பஞ்சாப்பின் பல பகுதிகளில் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.