3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா உயர்வு

புதுடெல்லி: ஜூன்3 –
இந்தியாவில் கொரோனா 3-ம் அலை ஓய்ந்து தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தது.
இதனால் தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் சரிந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் பாதிப்பு 2,745 ஆக இருந்தது. நேற்று 3,712 ஆக உயர்ந்தது. இந்நிநிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
கடந்த மார்ச் 11-ந் தேதி நிலவரப்படி தினசரி பாதிப்பு 4,194 ஆக இருந்தது. அதன்பிறகு தினசரி பாதிப்பு 4 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருந்து வந்தது.
இந்நிலையில் சுமார் 3 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு இன்று மீண்டும் 4 ஆயிரத்தை கடந்துள்ளது.
கேரளாவில் 2-வது நாளாக தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டி உள்ளது. அங்கு புதிதாக 1,370 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதேபோல மகாராஷ்டிராவில் 1,045 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மும்பையில் மட்டும் 704 பேர் அடங்குவர்.
டெல்லியில் 373, கர்நாடகாவில் 297, அரியானாவில் 188, உத்தரபிரதேசத்தில் 157, தமிழ்நாட்டில் 145 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 68 ஆயிரத்து 585 ஆக உயர்ந்தது.
தொற்றின் பிடியில் இருந்து 2,363 பேர் நேற்று நலம் பெற்று ஆஸ்பத்திரிகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 22 ஆயிரத்து 757 ஆக உயர்ந்தது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 21,177 ஆக உயர்ந்தது. இது நேற்றை விட 1,668 அதிகம் ஆகும்.
தொற்று பாதிப்பால் கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் 6 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுதவிர நேற்று டெல்லியில் 2, மகாராஷ்டிரா, நாகலாந்தில் தலா ஒருவர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,24,651 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று 12,05,840 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 193 கோடியே 83 லட்சத்தை கடந்துள்ளது.
இதற்கிடையே நேற்று 4,25,379 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
இதுவரை 85.17 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.