30ம் தேதி முதல் கர்நாடகத்தில் ராகுல் பாதயாத்திரை

பெங்களூர் : செப்டம்பர். 23 – இம்மாதம் 30 முதல் மாநிலத்தில் பாரத் ஜோடோ பாதயாத்திரை துவங்க இருப்பதுடன் , காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி , மற்றும் ப்ரியங்கா காந்தி இதில் பங்கேற்கவுள்ளனர் என மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். நகரில் இன்று நிருபர்களிடம் அவர் இது குறித்து தெரிவிக்கையில் செப்டம்பர் 30 அன்று காலை 9 மணிக்கு குண்டலுபேட்டேவிலிருந்து பாதயாத்திரை துவங்க உள்ளது. அக்டோபர் 2 அன்று பதனவாலு கிராமத்தில் காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம் . தசரா பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்கள் பாதயாத்திரைக்கு விடுப்பு அளிக்கப்படும். பெல்லாரியில் மாபெரும் பொதுக்கூட்ட மாநாடு நடக்க உள்ளது. அதில் ராகுல் காந்தி இளைஞர்கள் , மகளிர், விவசாயிகள் , சமுதாய முக்கிய பிரமுகர்கள் , மாணவர்கள் , மற்றும் பின் தங்கிய வகுப்பினர்களுடன் ஒவ்வொரு நாள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அனைத்து ப்ளாக் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தாலூகா காங்கிரஸ் சமிதியினர் , கட்சியின் அனைத்து பிரிவுகள் , கடந்த தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளர்கள் , மற்றும் பொது மக்கள் ஒன்று கூடிய தினத்தில் ராகுல் காந்தியுடன் இணைந்து பாதயாத்திரையில் கலந்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.