300 பேர் காயம்

புதுடெல்லி: பிப்ரவரி. 10 – உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட மதரஸா, மசூதி இடிக்கப்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தில் 5 பேர் உயிரிழந்தனர். சுமார் 300 பேர் காயமடைந்தனர்.
உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்டு வருகின்றன. போலீஸ் பாதுகாப்புடன் 20 நாட்களாக இப்பணி நடைபெறுகிறது. இந்நிலையில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் வன்புல்புரா பகுதியில் அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர்.
இங்கு மல்லீக் தோட்டம் எனும் பகுதியில் அரசுக்கு சொந்தமான நசூல் நிலத்தில் கட்டப்பட்டிருந்த மதரஸா, மசூதியை மாலை 5 மணிக்கு அதிகாரிகள் இடிக்கத் தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் மீது அப்பகுதியினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். வீடுகளின் மேலிருந்து பாட்டில்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நகராட்சி பணியாளர்களும் போலீஸாரும் காயம் அடைந்தனர். வன்முறை கும்பல்கள் வாகனங்களுக்கு தீ வைத்தன. இக்கலவரத்தில் போலீஸார் – வன்முறையாளர்கள் இடையே துப்பாக்கிச் சூடும் நடைபெற்றது. பின்னர் ஹல்துவானி முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்று காலை வரை தொடர்ந்த கலவரம் நண்பகலில் கட்டுக்குள் வந்தது. இக்கலவரத்தில் தந்தை, மகன் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். போலீஸார் உட்பட சுமார் 300 பேர் படுகாயமடைந்தனர். கலவரம் பரவாமல் தடுக்க இணைய சேவை முடக்கப்பட்டது. கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.