333 போர் விமானம் 247 கப்பல்கள்.. டிரம்ப் மிரட்டலுக்கு நடுவே ரஷ்யா – இந்தியா சம்பவம்

மாஸ்கோ: செப். 17-
அமெரிக்கா உடனான வர்த்தக பதற்றத்துக்க நடுவே ரஷ்யா மற்றும் பெலாரஸின் ஜபாட் ராணுவ பயிற்சியில் இந்திய வீரர்கள் இணைந்துள்ளனர். இந்த பயிற்சியில் மொத்தம் 333 போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள் உள்பட கடற்படையை சேர்ந்த 247 கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. ரஷ்யாவுடன் சேரக்கூடாது என இந்தியாவிடம், அமெரிக்கா கூறி வருகிறது. அதேபோல், அமெரிக்கா அங்கம் வகிக்கும் ‛நேட்டோ’ அமைப்பின் நாடான போலந்துக்கு, ரஷ்யாவால் மிரட்டல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டு பயிற்சியில் இந்தியா பங்கேற்று இருப்பது பேசும் பொருளாகி உள்ளது. இந்த நடவடிக்கையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை போட்டுள்ளார். இதில் 25 சதவீத வரி என்பது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி டிரம்ப் விதித்தார். அதுமட்டுமின்றி ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.ஆனால் நம் நாடு கேட்கவில்லை. தொடர்ந்து நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. அதுமட்டுமின்றி டிரம்ப் வரி விதிப்புக்கு பிறகு கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெயின் அளவை அதிகரித்துள்ளது நம் நாடு. இதனால் நம் நாட்டின் மீதும், ரஷ்யா மீதும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கோபமடைந்துள்ளார். இதற்கிடையே தான் தற்போது நம் நாடு ரஷ்யாவுடன் சேர்ந்து ராணுவ கூட்டு பயிற்சியை மேற்கொண்டுள்ளது. நம் நாட்டுக்கும், ரஷ்யாவுக்கும் நீண்டகாலமாக நல்ல நட்பு உள்ளது. குறிப்பாக ராணுவ தளவாடங்கள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்படுகிறது. இப்படியான சூழலில் தான் ரஷ்யா – பெலாரஸ் இணைந்து நடத்தும் ‛ஜபாட் 2025’ ராணுவ கூட்டு பயிற்சியில் நம் நாடு சேர்ந்துள்ளது. ரஷ்யா மற்றும் பெலாரஸ் தலைமையிலான ஐந்து நாள் பயிற்சியில் 65 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
57 இந்திய ராணுவ வீரர்கள், இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஏழு வீரர்கள், கடற்படையைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 65 வீரர்கள் நிஸ்னியில் உள்ள முலினோ பயிற்சி மைதானத்துக்கு சென்றுள்ளனர். அங்கு நடைபெறும் ஜபாட் கூட்டு பயிற்சி’யில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் அணுஆயுதத்தை வீசும் விமானங்கள், போர்க்கப்பல்கள், கனரக பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம், 1 லட்சம் பேர் இந்த கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ராணுவ சீருடையில் சென்று பயிற்சியை மேற்பார்வையிட்டதோடு வீரர்களுடன் கலந்துரையாடினார். அனைத்து வகையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிக்கும் வகையில் தயாராக இருக்க வேண்டும் என்று வீரர்களுக்கு உற்சாகப்படுத்தினார். இந்த பயிற்சி ரஷ்யா, பெலாரஸில் உள்ள 41 பயிற்சி தளங்களில் நடைபெற்றது. 33 விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் உள்பட 247 கடற்படை கப்பல்கள் இந்த பயிற்சியில் பயன்படுத்தப்பட்டது.